கோடநாடு கொலையில் தடயங்கள் அழிப்பு: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் அம்பலம்…

84

ஊட்டி-கொலை, கொள்ளை நடந்த கோடநாடு எஸ்டேட்டில், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பது, சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.
ஒப்படைப்பு

ஜெ., மறைவுக்கு பின், 2017 ஏப்., 24ல், எஸ்டேட்டில் நுழைந்த கொள்ளையர், காவலாளி ஓம்பகதுாரை கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டனர்.

காவலாளி ஓம்பகதுார் உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த, 30ம் தேதி இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியதை அடுத்து, இவ்வழக்கின், 1,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி., குழுவில், டி.ஜி.பி., முகமது ஷகில் அக்தர்,ஐ.ஜி., தேன்மொழி, கூடுதல் எஸ்.பி., முருகவேல், டி.எஸ்.பி.,க்கள் அண்ணாதுரை, சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டவர்கள் இடம் பெற்று உள்ளனர்.

இக்குழுவினர் கடந்த 26ம் தேதி கோடநாடு எஸ்டேட்டில், இரண்டு மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

காவலாளி ஓம்பகதுாரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம், வெட்டி அகற்றப்பட்டுள்ளது, சி.பி.சி.ஐ.டி., ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சில பகுதிகளிலும், தடயங்களை அழிக்க முயற்சி நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

நேபாளத்தில் விசாரணை

கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்து, தற்போது நேபாளத்தில் வசித்து வரும் இன்னொரு காவலாளி கிருஷ்ணதாபாவிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக போலீசார்நேபாளம் செல்ல உள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டு ஜாமினில் உள்ள, 12 பேரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டிருப்பதால், கோடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

‘மரம் வெட்டியது குறித்து விசாரணை’

ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ”சி.பி.சி.ஐ.டி., போலீசார் கோடநாடு எஸ்டேட் சென்று, அங்கு கொலை, கொள்ளை நடந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ”காவலாளி ஓம்பகதுார் உடலை தலைகீழாக கட்டிவைத்திருந்த மரத்தை வெட்டி, அகற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை எஸ்டேட் நிர்வாகம் நடவு செய்துள்ளது. மரம் வெட்டி அகற்றப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here